ரயில் நிலையங்களில் குடைகளை பெறலாம் பயணிகளுக்கு வசதி

பாவித்த பின்னர் மீளளித்தால் முற்பணம் திரும்ப கிடைக்கும்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

அடிக்கடி மழை பெய்கின்ற குளிர்காலம் இது. பயணங்களின் நடுவே மழைக்காக ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் இனி இல்லை. பாரிஸ் மெற்றோ ரயில் நிலையங்களில் குடை ஒன்றை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு செல்லலாம். மற்றொரு நிலையத்தில் அதனை மீளளித்துவிட்டுப் பயணத்தைத் தொடரலாம்.

குடைகளை வாடகைக்கு வழங்குகின்ற (prêt de parapluie) சேவை முக்கிய பல மெற்றோ நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்படுகிறது என்ற தகவலை பாரிஸ் மெற்றோ ரயில் வலையமைப்பை இயக்குகின்ற RATP நிறுவனம் (La Régie autonome des transports parisien) அறிவித்திருக்கிறது.

குறிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் முகவர்களிடம் ஏழு ஈரோக்களை வங்கி அட்டை மூலமோ காசாகவோ செலுத்திக் குடை ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும். பாவித்த பிறகு குடையை எங்கே மீளளிக்கிறீர்களோ அங்கேயே பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. குடையை நல்ல நிலையில் திரும்ப ஒப்படைப்பது அவசியம். தேவைப்பட்டால் திருப்பிக் கொடுக்காமல் அதனைச் சொந்தமாக வைத்துக்கொள்ளவும் முடியும்.

வழித்தடங்களில் எந்தெந்த நிலையங்களில் குடைகளை வாடகைக்குப் பெறலாம் என்ற விவரம் RATP இணையத்தளத்தில் https://www.ratp.fr/parapluies என்ற இணைப்பில் வெளியாகி உள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">