ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் நாமல் ராஜபக்ச.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் முன்னாயத்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ஆலோசித்து வருகின்றன.அந்த வகையில், ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுஜன பெரமுன சார்பில் மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பசில் ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார். இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் முழு ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இருதரப்பினர்களுக்கும் இடையில் அண்மைய நாட்களாக அரசியல் மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில் ஜனாதிபதி தயக்கம் காட்டியிருந்தார். இது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைத்திருக்கவில்லை. இதனால் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி மீது அதிருப்தி கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், பசில் ராஜபக்சவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் இதன் பின்னர் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை நிறுத்தினால் அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.