உலகின் 40 பணக்கார நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள்!
உலகின் 40 பணக்கார நாடுகளில் 5-இல் 1 குழந்தை வறுமையில் வாழ்கின்றது என்றும், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நார்வே, பிரித்தானிய ஐக்கிய அரசு, சுவிட்சர்லாந்து ஆகியவை 2014 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் குழந்தை வறுமையின் அதிகரிப்பை அனுபவித்துள்ளன என்றும் கூறியுள்ளது அண்மையில் வெளியான யுனிசெஃப் அறிக்கை.
டிசம்பர் 6, இப்புதனன்று, UNICEF Innocenti என்ற உலகளாவிய ஆராய்ச்சி அலுவலகம் மற்றும் Forecasting அமைப்பால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, 2014 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் சில பணக்கார நாடுகளில் உள்ள குழந்தைகள் வறுமையில் அதிகரிப்பை உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள UNICEF Innocenti என்ற உலகளாவிய ஆராய்ச்சி அலுவலகத்தின் இயக்குனர் Bo Viktor Nylund அவர்கள், குழந்தைகள் மீதான இத்தகைய வறுமையின் தாக்கம் நிலையானது என்றும், இது அவர்கள்மீது அதிகமான தீங்கை விளைவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த வறுமை நிறைந்த சூழல் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு, உடை, பள்ளி பொருள்கள் அல்லது வீட்டில் மகிழ்வுடன் தங்குவதற்கான வசதி ஆகியவற்றை அனுபவிப்பதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கிறது என்றும், இது, மோசமான உடல் மற்றும் மன நலத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார் இயக்குநர் Nylund