ஆரம்பப் பள்ளியில் நச்சு வாயுக் கசிவு! சிறார்கள் உட்பட பலர் ஆபத்தான நிலை!!

காபன் மோனொக்சைட் பரவியதால் அனர்த்தம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸின் மேற்குப் பிராந்தியத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நச்சு வாயு பரவியதால் 12 சிறுவர்கள் உட்படப் 14 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். குறைந்தது 48 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

Côtes d’Armor மாவட்டத்தில் உள்ள L’école primaire Saint-Guillaume என்ற ஆரம்பப் பாடசாலையிலேயே இந்த நச்சு வாயு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் மாணவர்கள் சிலர் தலைச் சுற்று, மயக்கம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியதை அடுத்தே பாடசாலைக்குள் நச்சு வாயு பரவியிருப்பது தெரியவந்தது.

குளிரூட்டப் பயன்படுகின்ற ஒயில் கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணமாக கார்பன் மோனொக்சைட் (carbon monoxide) வாயு வெளியேறிக் காற்றில் பரவியதனாலேயே சிறுவர்களுக்குக் கடும் சுவாசப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. . தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நான்கு ஹெலிக்கொப்ரர்கள் அடங்கிய அவசர முதலுதவி மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பாதிகப்பட்ட சிறுவர்களும் வளர்ந்தவர்களும் மிக விரைவாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

பாடசாலையில் இருந்து மொத்தம் 78 மாணவர்களும் ஆறு ஆசிரியர்களும் மீட்டு வெளியேற்றப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது. தகவல் பரவியதும் பெற்றோர்கள் விழுந்தடித்து ஓடிவந்து தங்கள் பிள்ளைகளை வீடுகளுக்குக் கூட்டிச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

கார்பன் மோனோக்சைட் நிறமோ மணமோ அற்றது. கண்களில் எரிவை உண்டாக்காது. எனவே அது பரவுவதை உடனடியாகக் கண்டுகொள்ள முடியாது.

ஆபத்தான நச்சு வாயு அது – என்று மருத்துவ நிபுணர் ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">