ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் தீர்மானித்தது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான வடிவேல் சுரேஷ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார்.

 இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரிற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் நலத்திட்டங்கள், தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகள் – சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.