கிழக்கு பல்கலைகழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா காலமானார்.

கிழக்கு பல்கலைகழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா தமது 74வது வயதில் காலமானார்.

அவர் நேற்றைய தினம், கொழும்பில் காலமானதாக அவரது குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் செ.யோகராசா யாழ்ப்பாணம் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி பிறந்தார்.

பின்னர், மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த அவர் 1991ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழித்துறை விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

இந்தநிலையில், அவர் 2009ஆம் ஆண்டு பேராசிரியராக நியமனம் பெற்று. 2014ஆம் ஆண்டு தமது பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் காலாண்டுச் சஞ்சிகையாக 1982ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் ‘கிழக்கொளியின் ஒவ்வொரு பதிப்பிலும், மட்டக்களப்பு பிரதேச கலைஞர்களை கண்டறிந்து உலகிற்கு அறியப்படுத்திய பெருமை இவரைச் சாரும்.

பேராசிரியர் செ. யோகராசா, பல சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்துள்ளார்.

அவர், ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், காத்திரமான பங்களிப்பினை நல்கியுள்ளார்.

இந்தநிலையில், பேராசிரியர் செ. யோகராசாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், கல்வியங்காடு தகனசாலையில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.