தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மிக்ஜாம் சூறாவளியின் தீவிரம் காணரமாக சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 937 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் முறையான வடிகால் வசதியின்மையினால் குறித்த முகாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இங்குள்ள மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் உள்ள மற்ற அகதிகள் முகாமை விட கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமிலே அதிகளவான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மிக்ஜாம் சூறாவளி காரணமாக சென்னையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் நகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையையே புரட்டிபோட்டு தத்தளிக்க விட்ட வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் சூறாவளியின் தாக்கம் அமைந்திருந்தது.