ஹமாஸிடம் பணயக் கைதியாகச் சிக்கி மீண்ட நாய்க்குட்டி!
யுத்த நிறுத்தம் முறிந்தது காஸாவில் மீண்டும் போர்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஹமாஸ் இயக்கம் பணயக் கைதிகள் பரிமாற்ற விவகாரத்தைத் தமக்குச் சாதகமான முறையில் – மிக நேர்த்தியான- சர்வதேச பரப்புரை உத்தியாகக் கையாண்டிருக்கிறது.
கடந்த ஏழு நாட்கள் நீடித்த போர் நிறுத்த காலத்தில் கட்டம் கட்டமாகப் பணயக் கைதிகளை விடுவிக்கும் வைபவங்களை அவர்கள் சர்வதேச ஊடகங்களது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் விதமான விதத்தில் நடத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாயன்று ஏழாவது கட்டமாக விடுவிக்கப்பட்ட சிவிலியன்களோடு கவனத்தை ஈர்க்கும் விதமாக நாய்க் குட்டி ஒன்றும் செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. “பெல்லா”(Bella) என்ற அந்த இஸ்ரேலிய நாய்க்குட்டி 17 வயதான இஸ்ரேலிய யுவதி ஒருவருக்குச் சொந்தமானது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்படச் சிலருடன் சேர்த்து பெல்லாவும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.
பெல்லாவுக்கு என்ன நடந்தது என்ற தகவல் எதுவும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலில் உள்ள குடும்ப உறவினர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பணயக் கைதிகள் பரிமாற்றத்தின் போது யுவதியும் நாய்க்குட்டியும் முகத்தை மூடி மறைத்த ஆயுதம் தாங்கிய ஹமாஸ் வீரர்களால் செஞ்சிலுவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட வீடியோக் காட்சி உலகெங்கும் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் எல்லைக்குள் நடத்திய பெரும் தாக்குதலின் போது தீவிரவாதிகளிடம் சிக்கிய 250 வெளிநாட்டவர்களில் சிலர் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாகப் பெண்கள் கேவலமாக நடத்தப்படும் காட்சிகளும் அதில் அடங்கி இருந்தன. அவை உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கண்டனத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.
அதனாலோ என்னவோ குழந்தைகள் உட்பட வெளிநாட்டுக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை சரியாகப் பராமரித்து அவர்களைக் கையளிக்கும் ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருக்கிறது ஹமாஸ்.
ஆயினும் இன்னமும் பணயக் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள நிலையில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்து காஸாவில் நேற்று வெள்ளிக் கிழமை மீண்டும் குண்டு வீச்சுத் தாக்குதல்களுடன் சண்டை தொடங்கியுள்ளது.
போர் நிறுத்தம் குழம்பியதற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவர் மீது மற்றவர் மாறி மாறிக் குற்றம் சுமத்தி வருகின்றன.