பாரிஸ் தாக்குதலாளி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில்.
ஐஎஸ் இயக்கத்துடன் அவருக்குத் தொடர்பு, ஈபிள் கோபுரப் பகுதியில் பொலீஸ் காவல் தீவிரம்
Photo :AFP – – – – – – –
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் ஈபிள் கோபுரத்துக்குச் சற்றுத் தொலைவில் சனிக் கிழமை இரவு ஒன்பது மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய – அல்லது அவர்களால் தூண்டப்பட்ட – ஒருவரது வெறிச் செயல் என்பதைப் பூர்வாங்க விசாரணைகள் உறுதிப்படுத்தி உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலாளி விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது பெற்றோர் உட்பட மூவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆர்மண்ட். ஆர் (Armand R) எனப்படும் தாக்குதலாளி தனது ‘எக்ஸ்’ சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று அவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதை வெளிப்படுத்துவதாகப் பயங்கரவாதத் தடுப்புப் பரிவு அரச வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் பிரான்ஸில் இதற்கு முன்னர் இடம்பெற்ற சில பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய முக்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் அவர் தொடர்பைப் பேணிவந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஒக்ரோபர் 16,2020 இல் சாமுவேல் பட்டி (Samuel Paty) என்ற ஆசிரியரைக் கழுத்தறுத்துக் கொன்ற செச்சினிய நாட்டு இளைஞருடனும் ஆர்மண்ட் டிஜிட்டல் தொடர்பைப் பேணி வந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
தாக்குதலாளி ஆர்மண்ட் 2016 இல் தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்ட குற்றத்துக்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். மனோநிலைப் பாதிப்பு என்ற காரணத்துக்காகப் பின்னர் அவர் உளவளச் சிகிச்சைத் தடுப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
நாட்டில் அண்மைக்காலமாக இது போன்ற கொடூரச் செயல்களைப் புரிகின்ற அனைவருமே பெரும்பாலும் மனநிலைக் குழப்பவாதிகளாக அடையாளங்காணப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
நாட்டை மீண்டும் அதிர்ச்சியடையச் செய்துள்ள இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், ஆபத்தான பேர்வழிகளையும் தீவிரவாதச் சந்தேக நபர்களையும் உளவளச் சிகிச்சைப் பிரிவுகளில் தடுத்துவைத்துப் பராமரிக்கின்ற நடைமுறைகளில் காணப்படுகின்ற பெரும் பலவீனத்தைக் காட்டுவதாக அரசியல் மட்டங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. அதேசமயம்,
தாக்குதல் இடமாக ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் செல்கின்றவர்களில் கணிசமானோர் பயன்படுத்துகின்ற மெற்றோ ரயில் நிலையப் பகுதியைத் தெரிவு செய்தமை தற்செயலானது அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், நாட்டின் பெருமையையும் உல்லாசப்பயணத்துறையையும் தாக்குவதே அந்த இடத் தெரிவின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் எனக் கணிப்பிடுகின்றனர்.
நேற்றைய தாக்குதலை அடுத்துப் பாரிஸ் நகரில் உல்லாசப் பயணிகள் அதிகமாகத் திரள்கின்ற ஈபிள் கோபுரப் பகுதியில் பொலீஸ் காவல் அதிகரிக்கப்படுவதாகப் பாரிஸ் பிராந்திய பொலீஸ்மா அதிபர் லோறோன்ஸ் நுனேஸ்(Laurent Nunez) தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
⚫ஜேர்மனிய சான்சிலர் அதிர்ச்சி
ஜேர்மனியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட ஈபிள் கோபுரத் தாக்குதல் சம்பவம் குறித்து சான்சிலர் ஒலாப் சோல்ஸ் அதிர்ச்சி வெளியிட்டிருக்கிறார். உயிரிழந்தவர் 23 வயதுடைய ஜேர்மனி – பிலிப்பைன்ஸ் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த 60 வயதான இங்கிலாந்துப் பிரஜையும் பிரான்ஸ் நாட்டவரும் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலத்துடன் வெளியேறி உள்ளனர்.