பாரிஸ் நகரில் ஜேர்மனியப் பிரஜை கத்திவெட்டில் பலி!

ஈபிள் கோபுரம் அருகே இரவு நடந்த தாக்குதல் ஈரான் பூர்வீக நபர் கைது

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பாரிஸில் நேற்றிரவு ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் கத்தி, சுத்தியல் மூலம் உல்லாசப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் ஜேர்மனியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வேறு இருவர் காயமடைந்துள்ளனர்.

பாரிஸ் நகரின் தெற்குப் பகுதியில் – பெருமளவில் உல்லாசப் பயணிகள் திரள்கின்ற ஈபிள் கோபுரம் அருகே உள்ள Bir Hakeim மெற்றோ ரயில் நிலையப் பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

“அல்லாஹூ அக்பர்” எனக் கோஷமிட்டவாறு தாக்குதல் நடத்திய அந்த ஆபத்தான நபரைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவர் பாரிஸ் புறநகராகிய நியூலி-சூ- செய்னைச் (Neuilly-sur-Seine) சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

உயிரிழந்த ஜேர்மனியப் பிரஜைக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாகவே மரணமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது மனைவியும் அதிர்ச்சி காரணமாக மயக்கமுற்ற நிலையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரெஞ்சுப் பிரஜை ஒருவரும் மற்றொரு வெளிநாட்டுக் குடிமகனுமே காயமடைந்த ஏனைய இருவருமாவர்.

தாக்குதலாளி சிறிது நேரத்தில் Bir Hakeim மேம்பாலம் பகுதியில் வைத்துப் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் 1997 இல் பிறந்த பிரெஞ்சு பிரஜை என்று கூறப்படுகிறது. உளவு சேவைகளால் ஏற்கனவே ஆபத்தான நபர்களைப் பட்டியலிடுகின்ற எஸ் (fiché S) பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தவர். தீவிர மனோநிலைக் குழப்பங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்காக அறியப்பட்ட அவர் 2016 இல் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பொலீஸார் அவரைக் கைதுசெய்த சமயம் அவர் “பாலஸ்தீனத்திலும் ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது” – என்று கூறினார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இது ஒரு பயங்கரவாதப் பின்னணி கொண்ட சம்பவமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. பயங்கரவாதச் செயல் தடுப்புப் பொலீஸ் பிரிவினர் அவரை விசாரிக்கவுள்ளனர்.

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா மற்றும் பாரிஸ் பொலீஸ் மா அதிபர் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு வருகை தந்தனர்.

அதிபர் மக்ரோன், பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகியோர் நேற்றைய தாக்குதலுக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதிபர் மக்ரோன் வெளியிட்டுள்ள “எக்ஸ்” பதிவு ஒன்றில், உயிரிழந்த ஜேர்மனியப் பிரஜையின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">