தமிழகம் முழுவதும் மிரட்டும் மிக்ஜாம் புயல்.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது.

அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புயல் எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.