அடிப்படைச் சம்பளம் ஜனவரி முதல் 1,406 ஈரோக்களாக அதிகரிக்கும்.
அரசின் உதவி ஏதுமின்றி 23 ஈரோ தானாக உயர்வு! வறுமைக்கு இது போதாது நிபுணர்கள் குழு மதிப்பீடு.
பிரான்ஸில் தொழிலாளர் ஒருவர் பெறுகின்ற ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம்(smic) ஜனவரி 2024 முதல் ஆயிரத்து 406 ஈரோக்களாக இருக்கும்.
தற்போது முழுநேர ஊழியர் ஒருவர் பெறுகின்ற அடிப்படைச் சம்பளம் (Le smic net pour un temps plein) ஆயிரத்து 383 ஈரோக்கள் ஆகும். அதில் அடுத்த ஆண்டு 23 ஈரோக்கள் மட்டும் உயர்வு ஏற்படுகிறது. அதுவும் அரசாங்கம் வழங்குகின்ற அதிகரிப்புக் கிடையாது. ஆண்டுதோறும் பணவீக்கத்தினதும் வாழ்க்கைச் செலவினதும் புள்ளிகளது வீதாசாரத்தில் அடிப்படை ஊதியத்தில் தானாகவே நிகழுகின்ற 1,7 % வீத அதிகரிப்பே (hausse automatique) இந்த உயர்வு ஆகும்.
வருடாந்தோறும் வழக்கமாக இடம்பெறுகின்ற இந்தச் சம்பள மீளாய்வு (revalorisation automatique) 2021 – 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஏழு தடவைகள் சிறுசிறு வீதங்களில் அதிகரிப்புச் செய்யப்பட்டு மொத்தம் 13.5 வீத அதிகரிப்பைப் பெற்றுள்ளது.
அரசின் ஊக்கத் தொகை ஏதுமற்ற இந்தச் சிறு அதிகரிப்பு வறுமையை எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லை. அடிப்படைச் சம்பளம் பெறுகின்ற பலவீனமான மக்கள் சமூகத்தை இது மேலும் பாதிப்புக்கே உள்ளாக்கும்- என்று அடிப்படைச் சம்பளத்தை ஆய்வு செய்கின்ற நிபுணர் குழு ஒன்று (groupe d’experts sur le smic publié) அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பிரான்ஸில் சட்டப்பூர்வ-குறைந்தபட்ச ஊதிய உயர்வுகள் வேலை செய்வோரிடையே வறுமையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இல்லை, அதன் விளைவுகள் பகுதிநேர வேலை செய்வோர், பகுதிநேர வருமானத்தில் தங்கி வாழும் குடும்பங்கள், தனி நபர்கள் மற்றும் தாய் அல்லது தந்தையை மட்டும் பெற்றோராகக் கொண்ட குடும்பங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றது.”
-இவ்வாறு தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் குழு மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் பிந்திய தரவுகளின் படி குறைந்தது 3.1 மில்லியன் தொழிலாளர்கள் ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளத்தைப் பெற்று வருகின்றனர்.