ஒலிம்பிக் காலத்தில் பாரிஸ் மெற்றோ ரிக்கெற் கட்டணம் இரு மடங்காக உயரும்.
பொதுப் போக்குவரத்துக்கு விசேட விலைகள் நிர்ணயம்
Photo :REUTERS
Kumarathasan Karthigesu-பாரிஸ்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது பாரிஸ் பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. சாதாரண மெற்றோ ரிக்கெற் ஒன்றின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று அறிவிக்கப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடுவதற்காகப் பல மில்லியன் விளையாட்டு ரசிகர்களும் உல்லாசப் பயணிகளும் நகருக்குப் படையெடுத்து வருகை தரவுள்ள சமயத்தில், பொதுப் போக்குவரத்து வசதிகளைத் திறம்பட வழங்குவதற்காகப் பெரும் நிதி முதலிடப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிக் காலப் பகுதியில் பாரிஸ் பிராந்தியம் முழுவதும் நெருக்கடியற்ற சீரான போக்குவரத்துச் சேவையை உறுதி செய்வதற்காகவே விசேட ரிக்கெற் கட்டண அதிகரிப்புச் செய்யப்படுவதாகப் போக்குவரத்துத் துறை (Île-de-France Mobilités) தெரிவித்துள்ளது.
அதன்படி 2024 ஜூலை 20 ஆம் திகதி முதல் செப்ரெம்பர் 8 ஆம் திகதிவரை அதிகரித்த கட்டணங்கள் நடைமுறையில் இருக்கும்.
இல்-து-பிரான்ஸ் முழுவதுக்குமான வாராந்த ரிக்கெற் கட்டணம் (passe hebdomadaire) 70 ஈரோக்களாக இருக்கும். ஒருநாள் முழுவதுக்குமான (une journée) கட்டணம் 16 ஈரோக்களாகவும் சாதாரண மெற்றோ ரிக்கெற் ஒன்றின் விலை 4ஈரோக்களாகவும் அதிகரிக்கப்படும்.
(மெற்றோ ரிக்கெற் ஒன்றின் தற்போதைய விலை 2.10 ஈரோக்கள்) . RER ரயில்களுக்கான சாதாரண ஒரு ரிக்கெற் கட்டணம் 6 ஈரோக்களாக உயர்த்தப்படும்.
பாரிஸ் பிராந்தியத்தில் வசிப்போர் முன்கூட்டியே ரிக்கெற்றுகளை வாங்கிச் சேமித்து வைப்பதன் மூலம் விலை அதிகரிப்பால் உருவாகக் கூடிய நெருக்கடிகளைத் தவிர்க்கலாம் என்று இல்-து-பிரான்ஸ் பிராந்தியத் தலைவி வலெரி பெக்ரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காகப் பாரிஸ் போக்குவரத்துச் சேவைகளில் முதலிடப்பட்ட பெரும் நிதியில் 200 மில்லியன் ஈரோக்கள் இந்த விசேட பயணக் கட்டண அதிகரிப்பு மூலம் வசூல்செய்யப்படவுள்ளது.