பாரிஸ் வான்பரப்பு ஐந்து மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.

ஒலிம்பிக் ஆரம்ப விழா ,பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையங்களும் இயங்கா என அறிவிப்பு.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

ஜூலை 26 ஆம் திகதி முன்னிரவு நகரின் மையத்தில் செய்ன் நதி மீது மிகப் பிரமாண்டமான திறந்தவெளி நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள தொடக்கவிழாவின் போது மாலை ஏழு மணி முதல் நள்ளிரவு வரை பாரிஸ் வான்பரப்பு இறுக்கி மூடப்பட்டிருக்கும். விமானங்கள் எதுவும் பறக்க  அனுமதிக்கப்படமாட்டா. அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பாரிஸ் பிரதான விமான நிலையமும் (Charles-de-Gaulle – CDG) ஒர்லி (Paris-Orly- ORY), லு பூசே (Le Bourget-LBG), மற்றும் பூவேய் (Beauvais-Tillé – BVA) ஆகிய பிரதான விமான நிலையங்களும் தொடக்க விழா நடைபெறுகின்ற சமயத்தில் விசேடமாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமானப் பயணங்களைப் பதிவு செய்தவர்கள் இந்த விமானப் பறப்புத் தடை மற்றும் விமான நிலையங்கள் மூடப்படுதல் காரணமாகப் பாதிக்கப்படக் கூடும்.

பிரான்ஸின் சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் அலுவலக வட்டாரங்களின் தகவலின்படி, பாதிக்கப்படக் கூடிய பயணிகளுடன் விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே தொடர்புகொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விவரங்கள் அடுத்த ஆண்டு இளவேனில் காலப்பகுதியில் அறிவிக்கப்படும்.