துவாரகா  போன்று வெளியான காணொளி இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டது  என தெரிவிப்பு.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என கூறி கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற மாவீரர் தினத்தில் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது என்றும் அந்த காணொளி வேறொரு பெண்ணின் காணொளி என்றும் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் சமூக வலைத்தள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் நாளன்று மாலை வெளியாகிய அந்த காணொளியில் பிரபாகரனின் மகள் உயிருடன் இருப்பதாகவும் ஏ.ஐ தொழிநுட்பங்கள் மூலம் தொடர்புகொள்வதாகவும் புலிகள் அமைப்பினர் கூறியுள்ளனர். அத்துடன் அமைப்பு மறுசீரமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பான காணொளியை பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே கண்காணித்து வரும் நிலையில், அந்த காணொளியை பார்த்த வடக்கின் சமூக ஊடக ஆர்வலர்கள் பலர், அது போலியானது என தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் தனது வாழ்நாளில் தனது குடும்ப உறுப்பினர்களை எந்த வகையிலும் ஊக்குவிக்கவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரின் போது இறந்துவிட்டார்கள் என்றும் இது ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனினும் இது தொடர்பான காணொளி வெளியானதும் உலகம் முழுவதும் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பெருமளவு பணம் வசூலித்துள்ளதாகவும் இலங்கைப் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.