கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செல்வதாக தெரியவந்ததையடுத்து இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வின்போது 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று  வரையில் 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றுடன் இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பில் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதைகுழியானது கொக்கிளாய்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது.இது தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது.

இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே, எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன. இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன’ என தெரிவித்தார்.