தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சி இணங்கினால் மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார்.

தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்தால், தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறைமை தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வித்தியாசமான யோசனைகளை முன்வைக்கின்றனர். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறைமைக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் தேர்தலை நடத்த முடியும்.மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையிலும் மற்றவை புதிய முறையிலும் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழுவில் எந்தவொரு கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருபவர்கள, தேர்தலை நடத்துவதை முட்டுக்கட்டைக்குள் தள்ளும் மாகாண சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் திருத்தத்தையும் அங்கீகரித்தவர்கள் என்றார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்துவதற்கு தமது கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பிரதமருக்கு பதிலளித்ததுடன், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவதற்கு திருத்தம் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவளிப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.