அதிமுக – பாஜக கூட்டணி பிளவு என்பது போலியான நாடகம்: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பப்பட்டது. அமலாத்துறையின் சம்மனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பு, மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறையை பாஜக ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மணல் கொள்ளையை தடுக்க, தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு ஏவி விடுகிறது. தமிழ்நாடு அரசின் மீது களங்கம் ஏற்படுத்தவே, பாஜக அமலாக்கத்துறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இறுதி விசாரணையின் போது மணல் கொள்ளை நடக்கவில்லை என நிரூபிப்போம். மணல் குவாரி விவகாரத்தில் போலி ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மணல் குவாரி விவகாரத்தில் எஃப்ஐஆர் செய்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும்.அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், உருவாக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டுதான் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக மீதான மக்களின் கோபம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அதிமுக – பாஜக கூட்டணி பிளவு என்பது போலியான நாடகம் எனவும் விமர்சித்தார்.