காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம்!
சர்வதேச மத்தியஸ்த முயற்சி பலனளிப்பு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மூண்டுள்ள போரைத் தற்காலிகமாக சில தினங்கள் இடைநிறுத்துகின்ற உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.
சர்வதேச நாடுகளது – குறிப்பாக அரபு நாடுகள் சிலவற்றினால் கடந்த சில வாரங்களாக எடுக்கப்பட்டு வந்த சமரச முயற்சிகளை அடுத்தே போர் நிறுத்த உடன்பாடு சாத்தியமாகியுள்ளது.
அதன்படி ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலியப் படைகளும் காஸாவில் நாளை வியாழக்கிழமை காலை முதல் நான்கு தினங்களுக்குப் போர் நடவடிக்கைகளை இடைநிறுத்துவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் பரஸ்பரம் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளது. தங்களால் சிறை பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளான சிவிலியன்களில் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் இயக்கமும் – தங்கள் வசம் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் சுமார் 150 பேரை விடுதலை செய்து கையளிப்பதற்கு இஸ்ரேலிய அரசும் –முதற்கட்டமாக இணக்கம் தெரிவித்துள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.
அத்துடன் போர் நிறுத்த நாட்களில் உணவு, மருந்து உட்பட மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏற்றிய நூற்றுக் கணக்கான வாகனங்கள் காஸாவின் சகல பகுதிகளுக்கும் சென்றுவர அனுமதி வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ள 50 பணயக் கைதிகளில் பிரெஞ்சுப் பிரஜைகள் மூவர் அடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் முதற்கட்டமாக விடுவிக்கவுள்ள பாலஸ்தீனக் கைதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட முக்கிய நபர்கள் உள்ளடங்குகின்றனர்.
இரண்டு தரப்புக்கும் இடையே இவ்வாறு ஒரு போர் நிறுத்த இணக்கம் எட்டப்படுவதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் அரசே முக்கிய இடைத்தரப்பாகச் செயற்பட்டது.
ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்ரோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் எல்லைதாண்டி நடத்திய ஒரு பெரும் தாக்குதலை அடுத்து இஸ்ரேலியப் படைகள் கடந்த பல வாரங்களாக காஸா மீது போர் நடத்தி வருவது தெரிந்ததே. ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆயிரத்து 400 பேர் கொல்லப்பட்டனர். வெளிநாடுகள் பலவற்றைச் சேர்ந்த குடிமக்கள் உட்பட சுமார் 240 சிவிலியன்களைப் பணயக் கைதிகளாகச் சிறைப்பிடித்த ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்களைக் காஸாவுக்குக் கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.
காஸாவை நிர்வகித்து வருகின்ற ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சின் தகவலின்படி இஸ்ரேல் படைகள் விடாது நடத்திவருகின்ற தாக்குதல்களில் இதுவரை 13 ஆயிரத்து 300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.