மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் : அதிமுகவுக்கு சிக்கல்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்துள்ள பிராமண பாத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் அலுவலகம் சார்பில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா ஊழல் வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக தாமதித்து வந்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா விநியோகிப்பவர்களிடம் இருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியிருந்தது. இந்த கோரிக்கையை மாநில அரசு ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது.
ஆனால், ஆளுநர் தரப்பில் எந்த பதிலும் இல்லாததால்இ இந்த வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இந்த கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். இதனால் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் மீது வழக்கு தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.