மோல்டோவாவில் ஒஸ்ரிய அதிபரது கையைக் கடித்துக் காயப்படுத்திய நாய்!

அரசுப் பயணத்தின் போது கவனத்தை ஈர்த்த சம்பவம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

நாய் மனிதரைக் கடிப்பது செய்தி அல்ல. நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி என்றொரு தொடர் பத்திரிகைப் பயிற்சிகளின் போது சொல்லப்படுவதுண்டு. ஆனால் – அரசுத் தலைவர் ஒருவரது நாய் மற்றொரு நாட்டின் அதிபரது கையைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் பற்றிய தகவலைச் சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

மோல்டோவா நாட்டின் பெண் அதிபர் மாயா சன்டு(Maia Sandu) வளர்ப்பு நாய்ப் பிரியர். விபத்தில் காயமடைந்த ‘கோட்ரட்’ (Codrut) என்ற பெயருடைய நாயை வளர்த்து வருகிறார். ஒஸ்ரியா நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனும் (Alexander Van der bellen) வளர்ப்புப் பிராணிகள் மீது – குறிப்பாக நாய்கள் மீது – அலாதியான பிரியம் உள்ளவர். நாய்களுடன் நடைப்பயிற்சி செல்வதைப் பொழுதுபோக்காக விரும்புபவர்.

கடந்த வாரம் ஒஸ்ரிய அதிபர் மோல்டாவோ நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். மோல்டோவா அதிபரது மாளிகையின் முற்றத்தில் இரண்டு அரசுத் தலைவர்களும் சந்தித்த நிகழ்வில் மாயா சன்டுவின் நாயை வாஞ்சையுடன் தடவ முற்பட்ட சமயம் அது கலவரமடைந்து அவரது கையில் கடித்துக் காயம் ஏற்படுத்தியது.

சிறிய காயம்தான். பெரிய செய்தியாகி சமூக வலைத்தளங்களில் காட்சிகள் வைரலாகின. அதிபர் கையில் கட்டுடன் அரசு வைபவங்களில் தோன்றினார்.

அதிகமானவர்கள் கூடும் இடத்தில் நாய்கள் கலவரமடைவது இயல்புதான். நான் ஒரு நாய்ப் பிரியன் என்பதைத் தெரிந்தவர்கள் இந்தச் சம்பவம் குறித்து ஆச்சரியப்படமாட்டார்கள்- என்று கூறிய அவர், மோல்டோவா அதிபரது நாய்க்குப் பொம்மை ஒன்றைப் பரிசளித்தார். அதிபர் மாயா சன்டுவும் அந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது சமூகவலைத் தளத்தில் வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனுக்கும் ரூமேனியாவுக்கும் இடையே அமைந்துள்ள மோல்டாவோ நாடு ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்துத் தலைநகர் சிச்சினாவ்வில் (Chisinau) ஒன்றுகூடிய ஒஸ்ரியா, ஸ்லோவேனியா நாடுகளின் தலைவர்கள் தமக்குள் பேச்சு நடத்தியுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">