நீண்ட தூரம் பாயும் அணு ஏவுகணை பிரெஞ்சு ராணுவம் பரிசோதித்தது!

தென்மேற்கு விண்ணில் தோன்றிய ஒளிப் பிழம்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

நாட்டின் தென்மேற்குப் பிராந்திய வான் பரப்பில் நேற்றுச் சனிக்கிழமை முன்னிரவு பெரும் வெடிப்பொலியைத் தொடர்ந்து திடீரெனத் தோன்றிய நீண்ட ஒளிக் கற்றை விண் கல்லினாலோ அல்லது வேறு எந்த வானியல் நிகழ்வுகளினாலோ உருவானது அல்ல என்றும் – பிரெஞ்சு இராணுவம் நடத்திய அணு ஏவுகணைப் பரிசோதனையே அவ்வாறு விண்ணில் நீண்ட ஒளிப் பிழம்பைத் தோற்றுவித்தது என்றும் – அறிவிக்கப்படுகிறது.

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் எம் 51.3 நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனையே (M51.3 long-range ballistic missile) நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் தென் மேற்கே Landes மாவட்டத்தில் அமைந்துள்ள பிஸ்கரோஸ் ஏவுகணைப் பரிசோதனைத் தளத்தில் (Biscarrosse Missile Test Center) இருந்து வட அத்திலாந்திக் ஆழ்கடல் நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக அதன் இலக்கைத் தொட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுத் தலைகள் பொருத்தப்படாமல் நடத்தப்பட்ட அந்த முதலாவது பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியது என்ற செய்தியைப் பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லுகோர்னு (Sébastien Lecornu) சுமார் ஒரு மணி நேரம் கடந்து தனது X சமூகவலைத் தளப் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டார். சோதனை நடத்தப்பட்ட தகவல் அதன் பின்னரே நாட்டுக்குத் தெரியவந்தது.

வரவிருக்கும் தசாப்தங்களில் பிரான்ஸின் கடல்சார் பாதுகாப்புப் பலத்தின் நீடித்த நம்பகத்தன்மைக்குப் பங்களிக்கவுள்ள ஏவுகணையின் முக்கிய முன்னேற்றத்தை உறுதிப்படுத்த இந்தச் சோதனை உதவியுள்ளது – ”என்று பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸின் அணு ஆயுதங்களின் செயல்பாட்டுத் திறனின் நம்பகத்தன்மையைப் பேணுவது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னறிவிப்பு ஏதுமின்றி நடத்தப்பட்ட இந்த அணு ஏவுகணைப் பரிசோதனை Landes பகுதி வான் பரப்பில் உருவாக்கிய பெரும் ஒளிப் பிழம்பு தென்மேற்குப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பெரு வெளிச்சத்துடன் தோன்றிய நீண்ட ஒளியின் மூலம் என்ன என்பது தெரியாது குழப்பமடைந்தவர்கள் சமூக ஊடகங்களில் அதுபற்றி வினவத் தொடங்கினர். வீடியோக்களும் பரவின.

இஸ்ரேல் – ஹமாஸ் போருடன் தொடர்பு படுத்தியும் இணையத்தில் தகவல்கள் பதிவிடப்பட்டன. வானில் ஏவுகணை ஏற்படுத்திய பெரு வெளிச்சம் இத்தாலி, ஸ்பெயின் நாடுகளிலும் தென்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">