கார் மீது வீழ்ந்தது விண் கல்லா? அறிவியலாளர்கள் ஆராய்கின்றனர்

"செவ்வாய்த் தாக்குதலா?" ஸ்ரார்ஸ்பூவில் நடந்த வியப்பூட்டும் சம்பவம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

“ஸ்ரார்ஸ்பூவில் நடந்தது செவ்வாய்க் கிரகத் தாக்குதலா?” -செய்தி ஊடகம் ஒன்று இவ்வாறு தலைப்பிட்டுள்ளது.

பிரான்ஸின் ஸ்ரார்ஸ்பூவில் வசிக்கும் ஒருவர் காலையில் தனது காரின் கூரைப் பகுதி மீது பெரிய துவாரம் தோன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காரில் இருந்து புகை வெளியேறிக்கொண்டிருந்தது. கல் துண்டு ஒன்று காரின் உள்ளே காணப்பட்டது.

சுமார் இரண்டு சென்ரி மீற்றர் அளவுடைய அக் கல் காரின் மேற் பகுதியில் பெரிய துவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்ததுடன் காரின் மீது பலமாக வீழ்ந்த மர்மக் கல்லை மீட்டனர்.

கதிர்வீச்சுப் பாதுகாப்புக்காகக் காரைச் சுற்றிவரத் தடுப்புப் போடப்பட்டது.

காரின் தடித்த இரும்புத் தகட்டுக் கூரையைத் தாக்கிப் பிரித்து உள்ளே நுழைந்திருப்பதால் அந்தக் கல் மிக வேகமான வீச்சுடன் வந்து கூரையைத் தாக்கியிருக்க வேண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

இரவுநேரம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் காரின் உரிமையாளர் மறுநாள்தான் அறிய முடிந்தது. ஆனால் அன்றைய இரவில் அதிர்வுடன் கூடிய குண்டு வெடிப்பு ஒலி போன்ற ஒன்றைத் தாங்கள் கேட்டதாகவும் ஜன்னல்கள் அதிர்வதை உணர்ந்ததாகவும் அயலவர்கள் சிலர் விவரித்துள்ளனர்.

கதிரியக்க ஆபத்தைத் தடுக்கும் நிபுணர்கள் குழு ஒன்று(specialists in radiological risks) அந்தக் கல்லில் இருந்து ஏதேனும் கதிரியக்கப் பொருள்கள் வெளியேறுகின்றனவா என்பதைப் பகுத்தறியும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

“நாங்கள் அதனை (கல்) ஒரு விண்நட்சத்திரத்தின் உடற் பகுதி எனச் சந்தேகிக்கின்றோம். நிபுணர்களது முடிவுக்காக அடையாளம் தெரியாத அப் பொருளைப் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்”- என்று தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த மர்மக் கல் என்ன? அது எங்கிருந்து வந்தது? என்ற மர்ம முடிச்சை அவிழ்க்கின்ற பெரும பொறுப்பு அது தொடர்பான அறிவியல் நிபுணர்களிடம் விடப்பட்டிருக்கிறது. காரின் கூரையில் ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை வாகனக் காப்புறுதி நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிப்போயுள்ளார் அதன் உரிமையாளர்.

உலகின் பல பகுதிகளில் விண் கற்கள் வீழ்கின்றமை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. ஆனால் நகரப் பகுதி ஒன்றில் அது கார் மீது தாக்கிய இந்தச் சம்பவம் நாடெங்கும் ஆச்சரியத்துடன் பேசப்படும் விவகாரமாகியுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">