அடுத்த வாரம் குளிர் காலநிலை எதிர்பார்ப்பு
புயல் மழையைத் தொடர்ந்து இலையுதிர்கால முதல் பனி
Photo :La Chaîne Météo-—
Kumarathasan Karthigesu-பாரிஸ்
நாடெங்கும்-குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்குப் பெரும்பாகத்தில் – நிலவி வந்த கடும் மழை மற்றும் புயல் கால நிலை தணிகின்றது. அதே சமயம், இலையுதிர் காலத்தின் முதலாவது பனிக் குளிர் பருவம் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவதாக எதிர்வு கூறப்படுகிறது.
பிரான்ஸில் பொதுவாக ஒக்ரோபர் இறுதியில் ஆரம்பிக்கின்ற முதலாவது உறை பனிப் பொழிவு(first frosts) இந்த முறை நவம்பர் மாத நடுப்பகுதிக்குப் பின்னராகத் தொடங்குகிறது. சுமார் முப்பது நாட்கள் நீடித்த கனமழைப் பொழிவு களை அடுத்து துருவக் குளிர்
காற்று (polar air) நாட்டுக்குள் பிரவேசிப்பதால் வெப்ப நிலை – -குறிப்பாக இரவு நேரத்தில் – ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் படிப்படியாகக் குறையலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் முதலாவது பனித் தூறல் வியாழக்கிழமை ஏற்படலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது.
கடுமையான வெப்ப வருடமாகக் குறிப்பிடப்படுகின்ற இந்த ஆண்டில் பருவநிலைகளில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக மரங்கள் இலைகளை உதிர்ப்பது தாமதமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் காடுகளில் மரங்கள் இன்னமும் இலைகுழைகளுடன் காணப்படுகின்றன. குளிர் காலத்துக்கு முன்பாகவே தங்கள் இலைகளைத் துறந்து வலிமையைத் தக்கவைத்துக் கொள்கின்ற மரங்களது காலச் சுற்றோட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாறுதல் இயற்கையைப் பாதிக்கலாம் என்கின்றனர் சூழலியலாளர்கள்.