ஆஸ்பத்திரிக்குள் படை நடவடிக்கை! ஒரு மணி நேரத்தில் வெளியேறுமாறு உத்தரவு!!

ஹமாஸ் தளத்தைத் தேடி உள்ளே சோதனையாம்!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

காஸாவின் பிரதான அல்-ஷிஃபா  (Al-Shifa hospital) மருத்துவமனையை ஒரு மணிநேரத்தில் காலி செய்து அங்கிருந்து அனைவரையும் வெளியேறி விடுமாறு இஸ்ரேலியப் படைகள் உத்தரவிட்டுள்ளன.

இந்த அறிவித்தல் இன்று காலை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டதாக ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள ஏஎப்பி செய்தியாளர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். ஐ. நா. தகவலின் படி நோயாளிகள், பராமரிப்பாளர்கள் உட்பட 2ஆயிரத்து 300 பேர் அந்த மருத்துவமனைக்குள் தங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காஸாவின் துறைமுகம் உட்படப் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்ரேலியப் படைகள் அங்குள்ள பிரதான அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளன. ஹமாஸ் இயக்கத்தினர் மருத்துவமனைக்கு உள்ளேயும் கீழே நிலத்தடியிலும் பாரிய தளம் ஒன்றை அமைத்துள்ளனர் என்று தெரிவித்திருக்கின்ற இஸ்ரேல், அங்கு தனது படையினர் தேடுதல்களை நடத்திவருகின்றனர் என்று அறிவித்திருக்கிறது .

ஹமாஸ் தீவிரவாதிகள் காஸா பகுதி முழுவதும் நிலத்துக்கு அடியே பலமான சுரங்கப் பாதை வலையமைப்பை நிறுவி உள்ளனர். இந்த நிலத்தடி தளங்கள் மருத்துவமனைகளுக்குக் கீழேயும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அங்கு தளம் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல நாட்களாக மின்சாரம், உணவு, தண்ணீர் வசதி எதுவும் இன்றி இயங்கி வருகின்ற அந்தப் போர்க்கள மருத்துவமனைக்குள் பணியாளர்கள், நோயாளிகள், காயக்காரர்கள் மாத்திரமன்றிப் பெரும் எண்ணிக்கையான சிவிலியன்களும் உயிர் அச்சம் காரணமாக அங்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

அல்-ஷிஃபா மருத்துமனை “ஒரு பெரும் மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது” என்று அதன் பணிப்பாளர் அங்குள்ள நிலைவரத்தைச் சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு வெளியிட்டு ஓரிரு நாட்களுக்குள் இஸ்ரேலிய இராணுவம் அங்கு நுழைந்திருக்கின்றது.

டாங்கிகளால் ஆஸ்பத்திரியைச் சுற்றிவளைத்த இஸ்ரேலியப் படைகள் உள்ளே நுழைந்து இலக்குகளைக் குறிவைத்து மட்டுப்படுத்திய படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது. காயமடைந்தோர் உட்பட அங்கு தங்கியுள்ள இளம் வயதினர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆஸ்பத்திரியின் சகல தளங்களிலும் உள்ள சிகிச்சைப் பிரிவுகள் அனைத்திலும் துருப்புக்கள் நுழைந்து சோதனை நடத்தி உள்ளன.

போர்க் களம் ஒன்றில் மருத்துவமனை ஒன்றுக்குள் படை நடவடிக்கைக்காகத் துருப்புக்கள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்திருக்கின்ற இந்தச் சம்பவம் உலகளாவிய ரீதியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

காஸாவில் உடனடியாக மனிதாபிமானப் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்குமாறு அகதிகளுக்கான ஐ. நா. முகவரகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">