பிரான்சில் புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் மசோதா நிறைவேற்றம்
பிரான்ஸ் செனேட்டர்கள், புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா தொடர்பில் நடத்திய விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தின் மேலவையில் நடைபெற்றுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள்.
210 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 115 பேர் எதிராகவும் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மசோதா, புலம்பெயர்தலைக் கடினமாக்கும் நோக்கத்துடனேயே கொண்டுவரப்பட்டுள்ளது. காரணம், அதில், நீண்ட காலமாக பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு பணி விசா வழங்குவதைக் கட்டுப்படுத்துதல், ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோருக்கான மருத்துவ உதவிகளை முழுமையாக நீக்குதல் முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும், சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும், வெளிநாட்டவர்கள் மீது கண்டிப்புடன் நடந்து, அவர்கள் அனைவரையும் நாடுகடத்துதலை விரைவாக்க உதவும் நோக்கத்தை கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்தியதரைக்கடல் பகுதியில், ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிக உதவியை வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.