ஹமாஸ் அமைப்பை கூண்டோடு அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம்.

இஸ்ரேல் – காஸா போரில், காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க இஸ்‌ரேல் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை என இஸ்‌ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கப் போரிடும் இஸ்‌ரேல், அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.அப்பாவிப் பொதுமக்கள் யார் உயிரிழந்தாலும் அது துயரத்திற்குரியது. தீங்கின் பாதையிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்த எங்களாலான அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். ஆனால், அவர்களை அந்தப் பாதையில் தக்கவைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஹமாஸ் மேற்கொள்கிறது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வீசுவதோடு, தொலைபேசியில் அழைத்து வெளியேறச் சொல்கிறோம்.அதன்படி பலர் வெளியேறிவிட்டனர்.

ஹமாஸ் அமைப்பை கூண்டோடு அழிப்பதே தன் இராணுவ நடவடிக்கையின் நோக்கம். அந்தப் பணியை, முடிந்தவரை பொதுமக்கள் அதிகம் உயிரிழக்காவண்ணம் செய்ய முயல்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி வெற்றியடையவில்லை.’ என தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள்,  இஸ்‌ரேலில் 1, 200 பேரைக் கொன்றதுடன் 240 பேரைப் பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இஸ்‌ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரையில் சுமார் 11500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4700 இற்கும் மேற்பட்டோர் சிறுவர்கள். மேலும், இந்தப் போரால் 2.3 மில்லியன் பேர் வசிக்கும் காஸாவில் மூன்றில் இரு பங்கினர் வீடின்றி உள்ளனர்.