விடுதலையாகி  ஒரு வருடம் கடந்தும், திருச்சி  சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்.


ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் முன்கூட்டியே விடுதலையாகி  ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்தும் திருச்சி  சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு அவர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவு தாமதமாவதன் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. முருகன் சாந்தன் ஜெயக்குமார் ரொபேர்ட் பயஸ் ஆகிய நால்வரும் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவு வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு அலுவலகத்திலிருந்து கிடைக்கும் வரை சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள் என முகாமிற்கான பொறுப்பதிகாரியும் மாவட்ட கலெக்டருமான எம் பிரதீப் குமார் கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு அலுவலகத்திலிருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.முருகன் சாந்தனிற்காக ஆஜரான சட்டத்தரணி புகழேந்தி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர்கள் விடுதலையான பின்னரும் இன்னமும் திருச்சி முகாமில் இருக்கவேண்டியதற்கான விசேட காரணங்கள் எதுவுமில்லை  என குறிப்பிட்டார்.முருகன் தனது மகளுடன் வசிப்பதற்காக லண்டன் செல்ல விரும்புகின்றார் தனது தாயுடன் இலங்கையில் வசிக்க விரும்புகின்றார் ஏனைய இருவரும் நெதர்லாந்து செல்ல விரும்புகின்றார்கள் என தெரிவித்துள்ள  புகழேந்தி இந்த நால்வரும் பொலிஸாரின் 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.