நிதி தேவையில்லை, நீதியே வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி தெரிவிப்பு.
ஒவ்வொரு வருடமும் பாதீட்டின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கென நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி எந்த வகையிலும் தமக்கு கிடைக்கப் பெறுவதில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், சர்வதேச விசாரணையே எமக்கு தேவை. நிதி கோரி நாம் போராடவில்லை. நிதி எமக்கு தேவையில்லை. நீதியே வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை. எனவேதான் சர்வதேச விசாரணை தேவை என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக பாதீட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.
இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஓ.எம்.பியின் செயற்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும் தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழிக்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையிலே எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்ற பார்க்கின்றனர்.இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளனர் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயமே.எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை.’ என தெரிவித்தார்.