“ஆபத்தான சமயம் நாட்டைக் காக்க உதவுவதில் மகிழ்ச்சி..”

அமைச்சுப் பொறுப்பேற்றார் முன்னாள் பிரதமர் கமரோன் ,இங்கிலாந்து அரசியலில் ஆச்சரியமளிக்கும் நகர்வு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

இங்கிலாந்துப் பிரதமர் ரிஷி சுனாக் இன்று திடீரென அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அதில் ஆச்சரியம் அளிக்கும் ஒரு சம்பவமாக நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோனுக்கு (David Cameron) வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பு (foreign secretary) அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அலுவலகமாகிய “நம்பர் 10 டவுணிங் வீதி”ப் பணிமனையில் இருந்து முன்னாள் பிரதமராகிய டேவிட் கமரோன் வெளிவிவகார அமைச்சராக வெளியே வந்த காட்சிகளும் செய்திகளும் பிரிட்டிஷ் செய்தி ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தன.

டேவிட் கமரோன் அமைச்சரவைப் பொறுப்பேற்ற பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ,”உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி உட்பட சர்வதேச சவால்களால் நாடு ஒரு கடினமான நிலைமையை எதிர்கொள்கிறது”-என்று தெரிவித்தார்.

“தீவிர அரசியலில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக விலகி இருந்த அதேசமயம், பழமைவாதிகளின் தலைவராகப் 11 ஆண்டுகளும் பிரதமராக ஆறு ஆண்டுகளும் பதவி வகித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட எனது அனுபவங்கள் இந்த முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்குப் பிரதமர் ரிஷி சுனாகிற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்” – என்றும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் அரசின் உயர்மட்டப் பதவிக்கு வருவது பல தசாப்த காலங்களில் மிக அரிதான ஒன்றாகும். அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு முன்னராகக் கமரோன் பிரபுக்கள் சபையின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

பிரிட்டிஷ் பழமைவாதிகளிடையே ஒரு மையவாதியாகத் திகழ்ந்த டேவிட் கமரோன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வது என்ற பிரிட்டனின் முடிவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தவர். 2016 இல் பிரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்த அவர், பிரிட்டிஷ் மக்கள் பிரிந்து செல்வதை ஆதரித்து வாக்களித்ததை அடுத்துத் தனது பிரதமர் பதவியை விட்டு விலகி இருந்தார்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவமேனின் (Suella Braverman) பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் தொடர்பாகச் சமீபத்தில் அவர் வெளியிட்டுவந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பிரதமர் ரிஷி சுனாகிற்குக் கட்சிக்குள் பெரும் அழுத்தத்தை உருவாக்கி இருந்தன.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை ஒட்டி இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது லண்டன் பெருநகரப் பொலீஸார் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டனர் என்று சுயெல்லா பிரேவமேன் பரபரப்பான கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார்.

அவரது இடத்துக்குப் புதிய உள்துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவு அமைச்சர்  ஜேம்ஸ் கிளெவெர்ளி (James Cleverly) நியமிக்கப்பட்டுள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">