பிரான்ஸின் பா-து-கலேயில் கடும் வெள்ளம்

நீர் உறிஞ்சும் பாரிய பம்பிகள் சேவைக்கு! 200 நகர சபைகளில் பாடசாலைகள் மூடல்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

மணிக்கு 5,400 கன மீற்றர் (cubic meters) வெள்ளத்தை உறிஞ்சி வெளியேற்றும் ராட்சத தண்ணீர்ப் பம்பி ஒன்றையே படத்தில் காண்கிறீர்கள். நாட்டில் முதல் முறையாக பா-து-கலே (Pas-de-Calais) பிராந்தியத்தில் இதுபோன்ற நான்கு பாரிய பம்பிகள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. megapumps எனப்படுகின்ற இந்த இயந்திரங்கள் வெள்ளம் தேங்கிய இடங்களில் இருந்து மணிக்கு 5.4 மில்லியன் லீற்றர்கள் நீரை வெளியேற்றவல்லன.

தேசிய சிவில் பாதுகாப்பு (La Sécurité civile) சேவை அதன் அனர்த்தப் பாதுகாப்புக்குரிய சகல வளங்களையும் இந்தப் பிராந்தியத்தில் முழு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறது.

பா-து-கலே பிராந்தியம் நாட்டின் வட பாகத்தில் (Hauts-de-France) அமைந்துள்ளது. அங்குள்ள பிரதான ஆறுகளாகிய லியான் (La Liane), வட கடலில் கலக்கின்ற கரையோர நதியாகிய ஆ(L’Aa) மற்றும் கேஞ்ச் (Canche) ஆகிய நீர் நிலைகளில் நீரின் மட்டம் மணிக்கு பத்து முதல் 15 சென்ரிமீற்றர்கள் உயர்ந்து வருகிறது. இதனால் கரையோரக் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாகக் கடும் வெள்ளத்தினால் அவதிப்பட்டு வருகின்ற இந்தப் பிராந்தியத்துக்கு வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (vigilance rouge) விடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு மாதத்தில் பெறுகின்ற ஒட்டு மொத்த அளவை ஒத்த மழை வீழ்ச்சி முழுவதும் அடுத்த ஒரிரு மணிநேரங்களுக்குள் கொட்டித் தீர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறையாகப் பா-து-கலே பிராந்தியம் இவ்வாறு ஒரு மோசமான வெள்ளப் பெருக்கு அனுபவத்தைச் சந்தித்துள்ளது. அண்மையில் நாட்டின் வடமேற்குப் பிரதேசங்களைத் தாக்கிய சியரான் மற்றும் டொமிங்கோஸ் (Ciaran – Domingos) புயல்களின் விளைவாகவே இந்தப் பெருமழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள சுமார் இருநூறு நகரசபைப் பிரிவுகளில் பாலர் முதல் உயர்தரம் வரையான சகல பாடசாலைகளையும் மூடுமாறு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு இடையிலான சுமார் 40 பிரதான வீதிகளும் (routes départementales) போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">