பெரியார் சிலை விவகாரம் : அண்ணாமலை கூ றிய விளக்கம்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ எனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் திராவிட கட்சிள் மீதும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘என் மண் என் மக்கள்’ சுற்றுப்பயண மேடையில் பேசுகையில்,  தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்ரீரங்கம் கோவில் வெளியே உள்ள கடவுள் இல்லை எனும் பலகை அகற்றப்படும் அதே போல கடவுள் மறுப்பாளர் சிலையும் அகற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும், பாஜக தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் தான் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள் என்றும் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’  சுற்றுப்பயண மேடையில் அண்ணாமலை பேசுகையில், நாங்கள் பெரியார் சிலையை உடைக்க மாட்டோம். தலைவர்கள் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு மாற்றி வைப்போம் எனவும் கோவிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும் தலைவர்கள் சிலை எங்கு இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்படுத்துவோம் என பேசியிருந்தார்.