காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது: இரா. சாணக்கியன் தெரிவிப்பு.


காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.பலஸ்தீனுக்கு ஆதவாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும், காசா சுடுகாடாக மாறுகிறது! வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகின்றது. சுடுகாடாக ஆக்கப்படும் நேரத்தில் மௌனம் காத்தவர்கள் பலர். எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.ஏன் எனில் அதன் வலியும் வேதனையும் எமக்குத் தெரியும். 2009 ஆம் ஆண்டுக்கும் அதற்கு முந்திய காலத்திலும் எம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள், மத வழிபாட்டிடங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முகாம்கள் என குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

ஓர் இனம் அழிவதை பால்சோறு கொடுத்து கொண்டாடும் மனோ நிலையில் எம் தமிழர் இனம் என்றும் இருக்க மாட்டார்கள். எங்கு அநியாயம் நடக்கின்றதோ அங்கு எமது மக்களின் மற்றும் எனது குரல் ஒலிக்கும். கொல்லப்படுபவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தும் இலங்கை வாழ் மக்கள் எமது நாட்டில் கொல்லப்படவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராட வேண்டும்’ இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.