இலங்கை பொலிசாரால்  எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது: மாணவ பிரதிநிதிகள் விசனம்.

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்த எங்களை கைதுசெய்ததானது காவல்துறையினரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்றுகொண்டிருந்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்திருந்தனர். மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு குரல்கொடுக்கும் வகையில் வடகிழக்கு பல்கலைக்கழக சமூகமாக இணைந்து நாங்கள் பண்ணையாளர்களின் நிலங்களை அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.அதன்போது பொது போக்குவரத்துக்கு ஏதும் தடைகள் ஏற்படாமலும் எங்களது உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். இந்நிலையில், எங்களை கைதுசெய்தது இலங்கை காவல்துறையினரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது’ என மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.