இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் இரெட்டை வேடம்.

மன்னார் படுகையில் 250 மெகாவொட் திறன் கொண்ட புதிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான ஆவணங்களில் கையொப்பமிடும் பணியை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விரைவுபடுத்தி வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஷரித்த ஹேரத் தெரிவித்தார்.

நவம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படுவதற்கு அமைச்சு தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் படி, எந்தவொரு தனியார் நிறுவனமும் உள்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால்,மேற்படி செயல்முறை இரண்டு அரசாங்கங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அமையப் பின்பற்றப்படவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என காட்டிக்கொண்டு போலியான முறையில் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.புதிய மின்சாரச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட குழுக்கள் சகல உடன்படிக்கைகளையும் இறுதி செய்ய அவசரம் காட்டுவதாகவும் அவர் கூறினார். 30 வருட காலத்துக்கு கைச்சாத்திடப்படவுள்ள இந்த உடன்படிக்கையின் மூலம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் 46 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் எம்.பி தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் பூநகரி காற்றாலைகளை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முறை தெளிவாக இல்லை எனத் தெரிவித்த பேராசிரியர், சட்டத்துக்கு புறம்பாகச் செயற்படும் மின்சார சபை அதிகாரிகள் இது தொடர்பில் எதிர்காலத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல வளர்ச்சி திட்டங்களைக் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கைப்பற்றியது.