36 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் கமல் – மணிரத்னம் கூட்டணி

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் KH234 படத்துக்கான போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Thug Life என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் வீடியோவில் கமல்ஹாசன், “என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர், காயல்பட்டினம் என் சொந்த ஊரு, பிறவியிலேயே நான் ஒரு காங்ஸ்டர்னு முத்திரை குத்திட்டாங்க..” என்று கூறும் வசனம் இடம் பெற்றுள்ளது.

புகை சூழ்ந்த களத்தில் தனியொரு ஆளாக நிற்கும் கமலை தாக்க எதிரி படையினர் சிலர் ஓடி வருவது போல் அமைந்துள்ளது. படத்தின் பேரில் மட்டும் மாஸ் காட்டவில்லை போஸ்டர் விடீயோவிலேயே மாஸ் காட்டியுள்ளனர் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது.

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் 36 ஆண்டுகள் கழித்து Thug Life படத்தின் மூலம் கமல் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர்.

ராஜ் கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் கமல்ஹாசன் தனது 233 வது படத்திற்காக எச். வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.