வெளிநாட்டவர்கள் குடும்பங்களை அழைப்பதற்கான சட்ட விதிகளில் திருத்தம்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸின் புதிய குடியேற்றச் சட்டப் பிரேரணையில் வெளிநாட்டவர்களது குடும்ப ஒன்றிணைவுக்கான நிபந்தனைகளில் (conditions du regroupement familial) சென்ட சபை சில திருத்தங்களைச் செய்துள்ளது.

அரசின் புதிய குடியேற்றச் சட்ட மூலம் பரிசீலனைக்காகச் சென்ட் சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்தச் சட்ட மூலத்தில் முதல் இரண்டு விடயங்களை அது பரிசீலனை செய்து திருத்தங்களைச் செய்துள்ளது.

அதன்படி – குடும்ப ஒன்றிணைவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன.

குடும்ப ஒன்றிணைவுக்கான நிபந்தனைகளாகப் பின்வரும் விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர் ஒருவர் தனது துணையையும் குழந்தைகளையும் அழைத்துக் கொள்வதற்கான வயது எல்லை 18 இல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. அவர் (“regroupant”) குறைந்தது 24 மாதங்கள் வதிவிட அனுமதியுடன் பிரான்ஸ் மண்ணில் தங்கி வாழ்ந்திருக்க வேண்டும். தன்னுடையதும் தனது குடும்ப உறுப்பினர்களினதும் மருத்துவக் காப்புறுதியை (assurance malade) அவரே தனது பொறுப்பில் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் பிரான்ஸுக்கு அழைக்கப்படுபவர்கள் பிரெஞ்சு மொழியில் குறைந்தபட்ச புலமையைப் பெற்றிருக்க வேண்டும்.

சட்ட மூலத்தில் இந்த நிபந்தனைகளை சென்ட் சபை திருத்தி இணைத்திருக்கிறது.  நாட்டின் வலதுசாரிகளது கட்டுப் பாட்டில் உள்ள சென்ட் சபையின் பரிசீலனைக்குப் பின்னர் புதிய சட்ட மூலம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதம் மற்றும் வாக்களிப்பைத் தாண்டவேண்டி இருக்கும்.