ஆபத்தான நாடுகளில் இருந்துவந்து தஞ்சம் கோருவோருக்கு உடனேயே வேலை செய்ய அனுமதி.

ஆறு மாதம் காத்திருக்கும் அவசியம் இனி கிடையாது

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஆபத்தான நாடுகள் என்று ஆண்டு தோறும் பட்டியலிடப்படுகின்ற நாடுகளில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், தங்களது தஞ்சக் கோரிக்கையைச் சமர்ப்பித்த கையோடு -வதிவிட அனுமதிக்காகக் காத்திருக்காமல் – உடனேயே தொழில் புரிய அனுமதிக்கப்படவுள்ளனர்.

நாட்டில் வரவிருக்கும் புதிய குடியேற்றச் சட்ட மூலத்தில் இதற்கான விதிகள் அடங்கியுள்ளன என்று பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி புகலிடம் கோரிய ஒருவர் சட்டப்படி தொழில் செய்வதற்கு ஆறு மாத காலத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும்.

பிரான்ஸின் உள்துறை அமைச்சு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பான கடுமைப்படுத்தப்பட்ட புதிய சட்ட மூலத்தைப் பல வார கால தாமதங்களுக்குப் பின்னர் சென்ட் சபையிடம் கையளித்திருக்கிறது. அதனை அடுத்தே அந்தச் சட்ட மூலத்தில் உள்ளடங்கியுள்ள சரத்துக்கள் செய்தி ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளன.

“குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், வெளிநாட்டவரை உள்வாங்குவதை மேம்படுத்துதல்” என்ற நோக்கிலான புதிய சட்ட மூலம் நேற்று திங்கட்கிழமை சென்ட சபையின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்துவரும் நாட்களில் சென்ட உறுப்பினர்கள் அதனை விவாதிக்கவுள்ளனர்.

வீஸா மற்றும் ஆவணங்கள் இன்றிச் சில தொழிற்றுறைகளில் பணிபுரிவோருக்கான வதிவிட அனுமதி (Titres de séjour pour les travailleurs sans-papiers), இலகுபடுத்தப்பட்ட நாடு கடத்தல் (expulsions facilities), வதிவிடம் கோரி விண்ணப்பிப்போருக்கான ஆகக் குறைந்த பிரெஞ்சு மொழிப் புலமை (niveau minimal en langue française pour obtenir une carte de séjour) போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய இந்தச் சட்ட மூலம் ஏற்கனவே அரசியல் மட்டங்களில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டுள்ளது. குடியேற்றம் காரணமாக நாடு எதிர்கொள்கின்ற அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்ட இந்தப் புதிய சட்ட விதிகள் போதாது என்று கூறும் வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சி விதிகளை மேலும் கடுமையாக்குமாறு கோரி வருகின்றது.

உணவகம், கட்டடத் தொழில், குழந்தைகள்-முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணிகள் போன்ற தொழில்களில் வீஸா இன்றிப் பணி புரிவோருக்குத் தற்காலிக வதிவிட அனுமதிகளை வழங்குவதைப் புதிய சட்ட மூலம் அனுமதிக்கிறது.

சட்டவிரோதமான வழிகளில் நாட்டுக்குள் நுழைந்து உணவகம் போன்ற துறைகளில் சட்டவிரோதமாகத் தொழில் புரிவோருக்கு இவ்வாறு விசேட வதிவிட அனுமதி வழங்குவதை வலதுசாரிப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">