ஏர் இந்தியாவில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து – காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானத்திற்குப் மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிக்கும் சீக்கியர்கள் ‘உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய முற்றுகை இருக்கும். இதனால்இ நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நவம்பர் 19 அன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே நாளில் தான் இது அனைத்தும் நடக்கும் என காலிஸ்தான் பயங்கரவாதி பரபரப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வெளிவந்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவரான பன்னுன் அக்டோபர் 10 அன்று பேசிய வீடியோ ஒன்றில், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இருந்து பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிலும் இதேபோன்ற நிலைமை வராமல், தடுக்க இந்திய அரசு கைகளில் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த வீடியோவில், பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்து பன்னுன் பேசிய வீடியோ பரபரப்பை கிளப்பும் வகையில் உள்ளது.