இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை விரைவில் அவசியமாகலாம்!

உலகம் மிக மிக ஆபத்தாக மாறிவருகிறது என்கிறார் முன்னாள் பிரதமர் பிலிப்

Photo :AFP screenshot 

Kumarathasan Karthigesu-பாரிஸ்

நாம் வாழும் உலகம் மிக மிக ஆபத்தாக மாறிவருகிறது. நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இளையோருக்குக் கட்டாய இராணுவசேவை அவசியமா என்ற கேள்வி விரைவில் எழலாம். -முன்னாள் பிரதமரும் நாட்டின் அடுத்த அதிபராகத் தெரிவாகக் கூடிய செல்வாக்கு மிக்க அரசியல் தலைவருமான எத்துவா பிலிப் (Édouard Philippe) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

ரேடியோ – ஜே’ வானொலி சேவைக்கு இன்று காலை நேர்காணல் வழங்கிய பிலிப்பிடம், கட்டாய இராணுவ சேவை தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இளையோர் அனைவருக்கும் அல்லது ஒரு பகுதியினருக்கு அது அவசியமா என்ற கேள்வி விரைவில் நம் முன்னே ஏழலாம். ஏனெனில் நாம் வாழும் உலகம் மிக மிக ஆபத்தானதாக மாறி வருகிறது – என்று அவர் பதிலளித்தார்.

“அதிபர் ஜாக் சிராக், நாட்டின் நலன்களைப் பாதுகாக்க முற்று முழுதாகப் பயிற்றுவிக்கப்பட்ட தொழில் முறை இராணுவத்தை உருவாக்கும் முடிவுக்கு அப்போது வந்திருக்கலாம். அது அந்த சமயத்தில் சரியான தெரிவு என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அது எப்போதும் பொருந்துமா?” – என்று கேள்வி எழுப்பினார் எத்துவா பிலிப்.

கட்டாய இராணுவ சேவை விவகாரம் அடுத்த அதிபர் தேர்தல் காலத்தில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

பிரான்ஸில் மதிப்பு மிக்க அரசியல் தலைவராகிய எத்துவா பிலிப், பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் லூ ஹார்வ் என்ற வடக்குத் துறைமுக நகரத்தின் முதல்வராகத் தனது அரசியல் பணியில் நீடித்து வருகிறார். அதேசமயம் கடந்த 2021 இல் அவர் “Horizons” என்ற பெயரில் மைய வலதுசாரிக் கொள்கைகொண்ட புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.

மக்ரோனின் முதல் ஐந்தாண்டு பதவிக் காலத்தின் தொடக்கத்தில் – கொரோனா பேரிடர் சமயத்தில்- பிரதமராகப் பதவி வகித்தவர் எத்துவா பிலிப். மக்ரோனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது தேர்தல் வெற்றிக்காகப் பின்னால் இருந்து உழைத்தவர். பிரதமர் பதவிக்காலத்தில் நாட்டு மக்கள் மத்தியில் மக்ரோனை விடவும் செல்வாக்கில் முதலிடத்தில் இருந்து வந்த அரசியல் தலைவர் அவர்.

கடந்த 2022 தேர்தலில் மக்ரோன் மீண்டும் பதவிக்கு வருவதற்கு வழிவிடுவதற்காக அத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டு அவருக்கு ஆதரவை வழங்கியவர்.

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இரண்டாவது சுற்றில் மரின் லூ பென் அம்மையாரைத் தோற்கடித்து நாட்டின் அடுத்த அதிபராகத் தெரிவாகி எலிஸே மாளிகைக்குச் செல்லக் கூடியவர்களது தரவரிசையில் எத்துவா பிலிப்பே முதலிடத்தில் இருந்து வருகிறார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">