லியோனில் யூதப் பெண் மீது வாள் வெட்டு!

அவரது வீட்டுக் கதவில் நாஸி சின்னம் பொறிப்பு

Photo :AFP screenshot .

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸின் லியோன் நகரில் இஸ்ரேலியப் பெண் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். அவரது வீட்டுக் கதவில் முன்னாள் ஜேர்மனிய நாஸி(Nazi) கட்சியின் சின்னமாகிய சுவாஸ்திகா (swastika) அடையாளம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரைத் தொடர்ந்து பிரான்ஸில் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் மத்தியில் நிலவி வருகின்ற பெரும் பதற்ற நிலையின் பின்புலத்தில் பதிவாகியிருக்கின்ற முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

லியோன் நகரின் மூன்றாவது நிர்வாகப் பிரிவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. யூத மதத்தைப் பின்பற்றுகின்ற முப்பது வயதுகளையுடைய பெண் ஒருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் வீட்டில் தனித்திருந்த சமயம் கறுப்பு உடை அணிந்த நபர் ஒருவரே இத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

தாக்குதலாளி அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர் வீட்டின் பிரதான வாயிற் கதவில் நாஸிக் கட்சியைக் குறிக்கின்ற சுவாஸ்திகா சின்னத்தைக் கத்தியால் செதுக்கிவிட்டுச் சென்றுள்ளார். அதனால் இது ஒரு யூத எதிர்ப்புவாதத் தாக்குதல் சம்பவம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அடிவயிற்றில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட அந்தப் பெண் பின்னர் லியோன் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த நாள் முதல் பிரான்ஸில் நாடெங்கும் இதுவரை சுமார் 857 யூத எதிர்ப்புவாதச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன என்றும் அவை தொடர்பாக 447 கைதுகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் உள்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் பாரிஸ் உட்பட பல நகரங்களிலும் வீதிகள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பவற்றில் யூத எதிர்ப்புவாதச் சின்னங்கள்(anti-Semitic tags) பொறிக்கப்பட்டு வருகின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">