நானுஓயா டெஸ்போட்டில் வெள்ளம் 8 க்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு.
செ.திவாகரன் டி.சந்ரு
மலைய பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக நானுஓயா பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் , கிளாரண்டன் ,கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (04) பிற்பகல் தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகமாக நானுஓயா டெஸ்போட் (சீனிகத்தாலை) தோட்டத்தில் 8 க்கும் அதிகமான வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன் மேலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது இந்த வீடுகளில் குடியிருந்த 8 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றன.
இவ்வாறு பாதுகாப்பாக தங்க வைத்தவர்கள் தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் இவ்வாறான பிரச்சினை மழை காலங்களில் தமக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.