ஓடுபாதையில் குழந்தையுடன் காரைச் செலுத்தி வந்து விமானத்தில் ஏற முயற்சித்த நபரால் பெரும் பரபரப்பு!
துப்பாக்கி வேட்டுத் தீர்ப்பு!! போத்தல் எறிகுண்டு வீச்சு ஹம்பேர்க் வான் தளத்தில் பெரும் களேபர நிலைமை
Photo :Bild News
நான்கு வயதுக் குழந்தையுடன் தனது காரை விமான நிலையத் தடைகளைத் தாண்டி ஓடுபாதையில் செலுத்திவந்து விமானம் ஒன்றை நெருங்க முற்பட்ட நபர் ஒருவரை ஜேர்மனியப் பொலீஸார் தடுத்து வைத்திருக்கின்றனர்.
ஜேர்மனியின் ஹம்பேர்க் ஹெல்முட் ஷ்மிட்(Hamburg Airport-Helmut Schmidt) விமான நிலையத்தில் நேற்றுச் சனிக்கிழமை மாலை நேரம் இந்தக் களேபரம் இடம்பெற்றிருக்கிறது.
நான்கு வயதுப் பெண் குழந்தையைக் காருக்குள் பணயமாக வைத்துக்கொண்டு துருக்கி நாட்டுக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறிச் செல்வதே அந்த நபரது நோக்கமாக இருந்துள்ளது. அவர் அந்தக் குழந்தையின் தந்தை என்று கூறப்படுகிறது. குழந்தை தந்தையால் கடத்தப்பட்ட தகவலைத் தாயார் முன்கூட்டியே பொலீஸாருக்கு முறையிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
விமான நிலையத் தடைகளை இடித்துத் தள்ளிக் கொண்டு காரைச் செலுத்திய அந்த நபர், பொலீஸார் நெருங்காமல் இருப்பதற்காகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளார். பெற்றோல் குண்டுகளையும் ஓடு பாதையில் வீசிஎறிந்துள்ளார். அதனால் ஓடு பாதையில் தீ பரவியது. அங்கு நூற்றுக்கணக்கான பயணிகளுடன் புறப்படத் தயாராக நின்ற துருக்கி ஏயார் லைன்ஸ் விமானம் ஒன்றுக்கு மிக நெருக்கமாகக் காரைச் செலுத்திச் செல்ல முற்பட்டார். பொலீஸ் கொமாண்டோக்கள் ஓடு பாதைக்கு விரைந்து சென்று நிலையெடுத்துக் கொண்டனர். ஒரு பெரும் தாக்குதல் நிலைவரம் போன்று கள நிலை மாறியதால் விமான நிலையத்தில் பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. விமானங்கள் தரையிறங்குவதும் புறப்பட்டுச் செல்வதும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
துருக்கி புறப்படவிருந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். அதேசமயம் விமான நிலையத்தில் பயணம் செய்யக் காத்திருந்த சுமார் மூவாயிரத்து 200 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் பஸ்கள் மூலம் அருகே உள்ள ஹொட்டேல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொலீஸார் அந்த நபருடன் நீண்ட நேரம் பேரம் பேச முயன்றனர். தன்னையும் மகளையும் விமானத்தில் துருக்கிக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுப் பொலீஸ் அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. துப்பாக்கியுடன் காணப்பட்ட அந்த நபருடன் நள்ளிரவு வரை சமரச முயற்சியில் ஈடுபட்ட பொலீஸார் இன்று காலை வரை அதனைத் தொடர்ந்தனர்.
இந்தச் சம்பவத்தால் ஹம்பேர்க் விமான நிலையத்துடனான வான் சேவைகள் அனைத்தும் நேற்று இரவு முழுவதும் தடைப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலும் சேவைகள் ரத்தாகி இருந்தன.
மறுஅறிவித்தல் வரை விமான சேவைகள் தடைப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.