பயங்கரவாதத்துக்கு எதிரான போரைச் சிவிலியன்களைப் பலிகொடுப்பதால் நியாயப்படுத்திவிட முடியாது!

காஸா மீதான தாக்குதல் அதிபர் மக்ரோன் விசனம் ,பிரெஞ்சு கலாசார நிலையம் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

படம் :மேற்குக் கரையோர நகரமாகிய  Finistère பகுதியில் புயல் அழிவுகளை மக்ரோன் நேரில் பார்வையிட்டார்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பயங்கரவாதத்துக்கு எதிரான போரை சிவிலியன்களைப் பலிகொடுப்பதன் மூலம் நியாயப்படுத்திவிட முடியாது. -அதிபர் எமானுவல் மக்ரோன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

புயல் தாக்கிய பிரான்ஸின் மேற்குக் கரையோர நகரத்துக்கு நேரில் விஜயம் செய்த அதிபர் மக்ரோன், அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே காஸா மீது இஸ்ரேல் நடத்திவருகின்ற தாக்குதல் பற்றி இவ்வாறு கண்டனம் தெரிவிக்கும் விதமான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்குள்ள உரிமையை மீண்டும் உறுதிப்படுத்திய மக்ரோன், “பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது பொது மக்களுக்கு எதிராகக் கண்மூடித்தானமான தாக்குதல்களை நடத்துவது அல்ல” – என்பதை வலியுறுத்தினார்.

காஸாவில் உள்ள பொது மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான சர்வதேச மனிதாபிமான அமைதி மாநாடு(conférence humanitaire) ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிஸில் கூட்டப்படும் என்ற தகவலையும் மக்ரோன் அங்கு வெளியிட்டார்.

காஸாப் பகுதியைத் தனது படைகள் சுற்றிவளைத்துள்ளன என்று இஸ்ரேல் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக காஸா மீது இஸ்ரேல் நடத்திவருகின்ற இராணுவ நடவடிக்கைகளில் அகதி முகாம்கள் உட்பட சிவில் நிலைகள் பல தாக்கப்பட்டுவருகின்றன. ஏராளமான சிவிலியன்கள் உயிரிழந்து வருகின்றனர். கடைசியாக இடம்பெற்ற சம்பவங்களில் அங்குள்ள பிரான்ஸின் பண்பாட்டு நிலையம் (institut culturel français) ஒன்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. அருகே அமைந்திருந்த ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனத்தின் காஸா பணிமனையும் ஷெல் தாக்குதலால் சேதமடைந்துள்ளது.

பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் கத்தரின் கொலோனா (Catherine Colonna) காஸாவில் கலாசார நிலையம் தாக்கப்பட்டிருப்பது பற்றி ஆச்சரியமும் குழப்பமும் அடைவதாகக் கூறியிருக்கிறார். அது தொடர்பில் இஸ்ரேல் அரசிடம் பாரிஸ் விளக்கம் கோரியுள்ளது.

இதேவேளை, சர்வதேச மன்னிபபுச் சபையின் செயலாளர் நாயகம் பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில், “காஸாவில் தற்சமயம் பாதுகாப்பான பகுதி என்று எதுவுமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">