கனடா 2026 முதல் குடியேற்றத்தை அதிகரிக்காது!
படம் :குடியேற்ற அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller)
அடுத்த இரு வருடங்களில்எந்த மாற்றமும் இருக்காது,பணவீக்கம், வதிவிடமின்மை நாடு நெருக்கடியை நோக்கி..
உலகெங்கும் இருந்து குறிப்பாக ஆசிய நாடுகளில் இருந்து பெரும் குடியேறிகள் படையெடுப்பைச் சந்தித்துவருகின்ற கனடா, வெளிநாட்டவர்களுக்கு வதிவிடம் வழங்கும் எண்ணிக்கையை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளது.
அதேசமயம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் குடியேற்ற இலக்குகளில் எந்த வித மாற்றமும் இருக்காது என்றும் அறிவித்திருக்கிறது.
ஆளும் லிபரல் – தாராளவாத – அரசின் இந்த அரசியல் தீர்மானத்தை குடியேற்ற அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) ஒட்டாவாவில் செய்தியாளர் மாநாடு ஒன்றில் வெளியிட்டிருக்கிறார்.
குடியேற்றவாசிகள் மத்தியில் பெரிதும் கவர்ச்சி மிக்க நாடாக விளங்கும் கனடா உள்நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் வீட்டு வசதிநெருக்கடி போன்ற பலவித சவால்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதன் காரணமாக வெளிநாட்டவர்கள் தொடர்பான அரசியல் இலக்குகளில் வரையறைகளைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கனடாவுக்குள் வெளிநாட்டவரை உள்வாங்கும் இலக்கு எண்ணிக்கை 2015 வரை மூன்று லட்சத்துக்கும் குறைவாகவே இருந்து வந்தது. சமீப ஆண்டுகளில் அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
கனடா இந்த ஆண்டு 4 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வதிவிட உரிமைகளை வழங்கத் தீர்மானித்திருந்தது. அடுத்த 2024 இல் அது 4 லட்சத்து 85 ஆயிரமாகவும் 2025 இல் 5 லட்சங்களாகவும் இருக்கும்.
இந்தக் குடியேற்ற இலக்கில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது என்பதை அமைச்சர் மார்க் மில்லர் உறுதிப்படுத்தினார். ஆனால் 2026 ஆம் ஆண்டு முதல் குடியேறிகளது வருடாந்த எண்ணிக்கை அளவில் உயர்வு இருக்காது – அதாவது 5லட்சங்களைத் தாண்டி அது மேலும் அதிகரிக்கப்பட மாட்டாது – என்பதே லிபரல் அரசு விடுத்துள்ள செய்தி ஆகும்.
கனடாவுக்குள் வெளிநாட்டவரை உள்வாங்கும் இலக்கு எண்ணிக்கை 2015 வரை மூன்று லட்சத்துக்கும குறைவாகவே இருந்து வந்தது.
“இந்தக் குடியேற்ற வரையறைகள் கனடாவின் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி வேகத்தைச் சீரமைக்க உதவும் அதே வேளையில் உட்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கியமான அமைப்புகளில் தாக்கங்களைக் குறைக்கும்” – என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதேசமயத்தில், பொருளாதார வளர்ச்சிக்கும் சனத்தொகை வயதுச் சீரமைப்புக்கும் கனடாவுக்கு மேலும் வெளிநாட்டுக் குடியேறிகள் நீண்ட கால அடிப்படையில் அவசியமாக உள்ளனர் என்று கனடா றோயல் வங்கியின் (Royal Bank of Canada) அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
வருடாந்தம் 1.3% வீத குடியேற்ற அதிகரிப்பு நாட்டின் சனத்தொகையின் வயதுக் கட்டமைப்பைச் சீராகப் பேணுவதற்குப் போதுமானது அல்ல என்றும் அது 2.1% வீதமாக அதிகரிக்கப் படவேண்டும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையான 12 மாதங்களில் 2.9% வீதத்தால் அதிகரித்த சனத்தொகை 40 மில்லியன்களைக் கடந்துள்ளது.
கனடாவைப் பொறுத்தவரை அதன் சனத் தொகை அதிகரிப்பு என்பது குடியேறிகளது வருகையினாலேயே நிகழ்கிறது. இவ்வாறு சனத்தொகை அதிகரிப்பது சமீப காலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்துள்ளது.
மறுபுறத்தில் நாட்டுக்குள் நுகர்வோர் அதிகரிப்பது தேவைகளைக் கூட்டி பொருள்களது விலைகளின் அதிகரிப்பை உருவாக்குகிறது. ஏராளமான தொழிலாளர்களது வருகை ஊதியங்களிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதனால் தான் வெளிநாட்டவர்கள் ஒரு புறம் அங்கு பொருளாதாரத்தின் ஊக்கிகளாகவும் மறுபுறம் பணவீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கான பிரதான காரணியாகவும் கணிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் பணவீக்கம் அதிகரிப்பு, குடியிருப்பு வசதியின்மை போன்ற விளைவுகளுடன் வெளிநாட்டுக் குடியேறிகளைத் தொடர்புபடுத்தும் விதமான கருத்துக்களை பொருளியல் நிபுணர்கள் வெளியிட்டு வருவது அரசியல் கொள்கைகளில் தாக்கம் செலுத்துகின்றது.