கொழும்பு -”நாம் 200” தேசிய நிகழ்வு.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் 200 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு ”நாம் 200” எனும் தேசிய நிகழ்வு கொழும்பில் நேற்று (02) நடைபெற்றது.

1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் ஜோர்ஜ் பேர்ட்டினால் கோப்பி பயிர்ச்செய்கை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாளில் கோப்பிச் செய்கையும் செய்கையாளர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.

இதனையடுத்து, ஜேம்ஸ் டெய்லர் கண்டிக்கு அண்மையிலுள்ள லூல்கந்துர எனும் பகுதியில் 1865 ஆம் ஆண்டு தேயிலைச் செய்கையை ஆரம்பித்தார். தேயிலைத் தோட்டங்களில் கூலித்தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர்.

பெருந்திரளாக கப்பல்களில் அழைத்துவரப்பட்டு மன்னாரில் கரையிறங்கி, விலங்குகளின் தாக்குதல், கொள்ளை நோய் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே மலையகத்தை சென்றடைந்து, கூலி வேலை செய்த இந்திய வம்சாவளி மலையக மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள் எண்ணிலடங்காதவையாகும்.

தேயிலை பணப்பயிர் அந்தஸ்தைப் பெறுவதற்காக எம்மவர்கள் தமது உடல், பொருள், ஆவி எனும் அனைத்தையும் உழைப்பு எனும் வேள்வித் தீயில் ஆகுதியாக்கினர்.
அவ்வாறே அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் ” நாம் 200 ” தேசிய நிகழ்வு நீர்வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மதத் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்ற இந்த தேசிய நிகழ்வின் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நீர் வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழகத்தின் நிதி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை, கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் கலாநிதி ராம் மாதவ் உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

மலையகத்தின் எழுச்சிக்காய் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்திய அன்பளிப்பான 10,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் மலையகத்தின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இணைந்து காணொளியூடாக திறந்து வைத்தனர்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மண்டபமும் கணினிக் கூடமும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

இதன்போது, மலையக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் , மலையக பாடசாலைகளுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மலையக மண்ணின் தொன்மைவாய்ந்த கலைகளையும் பாரம்பரியத்தையும் உலகறியச் செய்யும் நோக்கில், பல கிராமியக் கலை வடிவங்களும் ‘நாம் 200’ தேசிய நிகழ்வில் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஸ் குனவர்தன,

நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித் தருவதற்காக மலையக மக்கள் 200 வருடங்களாக இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளப்படுத்தியுள்ளனனர் என்றும் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்திற்கான அதிக பங்களிப்பை அவர்களே வழங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள். தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். மலையக மக்களின் கஷ்டத்தையம் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது. உங்களுக்குக் கல்வி,சுகாதார,மருத்ததுவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

எதற்காக இந்த நிகழ்வு? எதற்காக இந்த அங்கீகாரம் என நிறையப் பேர் வினவுகிறார்கள். காடுகளை தோட்டங்களாக மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் கொடுப்பதற்குப் பங்களித்த மக்களை நாம் இன்று அங்கீகரிக்கின்றோம்.

இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளில் 30 வீதமானவர்கள் மாத்திரம் தான் கல்வி கற்கின்றனர். வெறும் 40 சதவீதத்தினருக்குத் தான் சுகாதாரம் கிடைக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசியல் ரீதியான தீர்மானங்களை விட உண்மையான மாற்றங்கள் அவசியம். அந்த மாற்றத்தைக் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரிய பங்களிப்பை செய்கிறார்.

அவரால் 2013 இல் இருந்து இன்று வரை 14 ஆயிரம் வீட்டுத் திட்டம் கிடைத்தது. இந்திய அரசின் ஊடாக வேறு வேலைத்திட்டங்களும் கிடைத்தன.

நாம் ஒன்றும் தாழ்ந்தவர்கள் கிடையாது. இன்று ஒரு இலட்சத்து முப்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே உள்ளனர். மலையகத் தமிழர்களின் முழுமையான தொகை 13 இலட்சமாக உள்ளது. இருப்பினும் மேற்படி எண்ணிக்கையிலான தொழிலாளர்களே 13 இலட்சம் பேருடைய அடையாளமாக விளங்குகின்றனர்.

எமது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனர். 200 வருடங்கள் நாம் கஷ்டப்பட்டுளோம். மலையக சமூகத்தை வைத்து வாக்கு வேட்டை தான் செய்துள்ளார்களே தவிர இந்த சமூகத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவர சரியான திட்டம் யாரும் கொண்டுவரவில்லை. நமது அமைச்சின் ஊடாக வழமையாக 3000 மில்லியன் கிடைக்கும் இம்முறை 14 மில்லியன் கிடைத்துள்ளது.

10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம். நமக்கிடையிலான பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் ஒதுக்கி அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தை முன்னேற்ற முன்வர வேண்டும். இந்த மாற்றத்தை எனது வாழ்நாளில் கொண்டுவருவேன் என்று உறுதியளித்தார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.