வடக்கு – கிழக்கில் பௌத்த பிக்குகள் அச்சுறுத்தல்-ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக் குழுவிடம் எடுத்துரைத்த இரா.சம்பந்தன்
வடக்கு – கிழக்கில் பௌத்த பிக்குகள், தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அவர்கள் இனவாதத்தைக் கக்கி மதவாதத்தைத் தூண்டி வருகின்றனர். தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு பௌத்த மயமாக்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரச தரப்பினரிடம் நாம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக் குழுவிடம் நேரில் எடுத்துரைத்தார். அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்’ – என்றும் அவர் வலியுறுத்தினார்.இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று முன்தினம் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன்போதே சம்பந்தன் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினைகள், நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன என்று இந்தச் சந்திப்பில் பங்கேற்ற சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.