பாரிஸ் RER A ரயில் சேவைகள் சில பாதுகாப்புக்காக நிறுத்தப்படும்.

பொதுப் பூங்காக்கள் பூட்டு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

சியரான்” (Ciaran) எனப்படும் புயலின் பாதிப்பை எதிர்கொள்வதற்காக நாட்டின் மேற்கு, வடக்குப் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ளன. அது தற்சமயம் பாரிஸ் பிராந்தியம் வரை விரிவுபடுத்தப் பட்டுள்ளது. பாரிஸ் நகரம், மற்றும் இல்-து-பிரான்ஸ் மாவட்டங்களாகிய Yvelines, Val-d’Oise, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne ஆகிய பகுதிகளுக்கும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செம்மஞ்சள் எச்சரிக்கையை(vigilance orange) வானிலை அவதான நிலையம் விடுத்துள்ளது.

இதேவேளை – பாரிஸ் பிராந்தியத்தில் RER A மற்றும் ட்ரான்சிலியன் வழித் தடங்களில் வியாழக்கிழமை முழுவதும் சேவைகள் பகுதி அளவில் தடைப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாரிஸ் Poissy – Cergy இடையே இயக்கப்படும் RER A ரயில்கள் சில பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்படலாம் (“arrêts préventifs”) என்று அவற்றை இயக்குகின்ற SNCF நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரான்சிலியன்(Transilien) போக்குவரத்து சேவையின் கீழ் இயங்கும் L, J, N, U வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் தடைப்படலாம்.

அத்துடன் T13 ட்ராம் (tramway) சேவைகளிலும் தடங்கல்கள், தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சேவைகளது நேரங்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு ரயில் நிலையங்களுக்குச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள பல பூங்காக்கள், நகரசபைப் பூங்காக்கள் விலங்குப் பூங்காக்கள், காடுகள், இடுகாடுகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் வெள்ளிக்கிழமை காலை வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புயல் கடுமையாகத் தாக்கக் கூடிய பிராந்தியங்களான Brittany, Normandy, Hauts-de-France, Pays de la Loire, Centre-Val de Loire ஆகியவற்றில் ரயில் சேவைகள் தடைப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகள் சிலவற்றில் பார ஊர்திகள் பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பிரதான தெருக்களில் சாதாரண வாகனங்களது வேகம் மணிக்கு 20 கிலோ மீற்றர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 500 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.