புயல் பிரதேசங்களில் இரவு நடமாட்டத்தைத் தவிருங்கள்!

மக்களுக்கு அரசு அறிவுரை ரயில் போக்குவரத்துகளில் தடை தாமதங்கள் ஏற்படும்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

சியரான்” (Ciaran) புயலினால் கடும் பாதிப்புகளைச் சந்திக்கக் கூடிய பிராந்தியங்களில் இரவு நேரத்தில் நடமாட்டங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடற்கரைகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் அவர் நாட்டு மக்களிடம் கேட்டிருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் – இன்று மாலை- பிரான்ஸின் மேற்குக் கரையைக் கடக்கவுள்ள புயலினால் இன்றிரவும் நாளை வியாழக்கிழமை பகலும் பரவலாகச் சேதங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அவசர சேவைக்குத் தயாராக நான்கு ஹெலிக்கொப்ரர்களுடன் மூவாயிரத்து 200 தீயணைப்பு வீரர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு அருகே அத்திலாந்திக் கடலில் எழுந்த தாழமுக்கம் புயலாக மாறி மேற்கு ஐரோப்பாவை நெருங்கியுள்ளது. அந்தப் புயலுக்கு “சியரான்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அது பிரான்ஸின் மேற்குக் கரையோரப்பிராந்தியங்களை மூர்க்கமாகத் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் வேகம் கரையோரங்களில் மணிக்கு 170 கிலோமீற்றர்கள் வரை இருக்கக்கூடும்.

காற்றுடன் கூடிய மழையின் தாக்கம் மேற்கே தொடங்கி பாரிஸ் பிராந்தியம் வரை உணரப்படலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மூன்று மாவட்டங்களில்(Finistère, Côtes-d’Armor, Manche) இன்று நள்ளிரவு முதல் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கையின் உச்ச அளவாகிய “சிவப்பு எச்சரிக்கை”(vigilance rouge) விடுக்கப்படவுள்ளது.

நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளன. பாரிஸில் இருந்து வடமேற்கே செல்கின்ற நீண்ட தூர TER, TGV ரயில்சேவைகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சமகாலத்தில் சியரான் புயல் இங்கிலாந்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்படுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">