குண்டை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டிய பெண் மீது பொலீஸார் சூடு!
பாரிஸ் ரயில் நிலையத்தில் காலைவேளையில் பதற்றம்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
“அல்லாஹூ அக்பர்” என்று கோஷமிட்ட வாறு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் மீது பொலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.அதனால் படுகாயமடைந்த அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பாரிஸ் நகருக்குத் தென் கிழக்கே RER C ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள Bibliothèque François Mitterrand நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இதனால் பயணிகள் வெளியேற்றப் பட்டதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முகத்தை மறைத்து பர்தா ஆடை அணிந்து தோற்றமளித்த – 38 வயதுடைய – பெண் ஒருவரே சுடப்பட்டவர் ஆவார். காலையில் பயணப் பரபரப்பு மிகுந்த வேளையில் அந்தப் பெண்ணின் நடத்தையை அவதானித்த பயணிகள் சிலர் போக்குவரத்துக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர் என்று கூறப்படுகிறது.
வெவ்வேறு இடங்களில் பெண்ணை அவதானித்த பலரும் அவரது செயல்களால் சந்தேகமடைந்தனர். “அல்லாஹூ அக்பர்” என்று கோஷமிட்ட அவர் தாக்குதல் நடத்தும் பாணியில் பலரை மிரட்டியுள்ளார்.
காலை 07.30 மணியளவில் பொலீஸார் அந்தப் பெண்ணை Bibliothèque François Mitterrand ரயில் நிலையத்தில் வைத்துக் கைதுசெய்ய நெருங்கிய போது, அவர் தன்னை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டினார் என்றும் – ஒரு கட்டத்தில் பொலீஸ் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்து அவரால் பாதுகாப்புக்கு ஆபத்து நேரப்போவதாக உணர்ந்த பொலீஸார் அவரைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் – பொலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அந்தப் பெண்ணுக்கு வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வெடி குண்டோ அல்லது தாக்குதல் ஆயுதங்கள் எதுவுமோ அவரிடமிருந்து மீட்கப்படவில்லை.
பாரிஸ் நீதி நிர்வாகப் பொலீஸ் பிரிவு இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வெவ்வேறு விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. பெண்ணின் செயல் தொடர்பாக ஒன்றும், பொலீஸார் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்பது தொடர்பில் மற்றொரு விசாரணையும் தொடக்கப்பட்டுள்ளது.
“சூழ்நிலை மிக ஆபத்தானது என்பதை மதிப்பிட்ட பிறகே பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்” என்று அரச பேச்சாளர் ஒலிவியே வேரன் விளக்கமளித்திருக்கிறார்.
சுடப்பட்ட பெண் யார் என்ற மேலதிக தகவல்கள் உடனே தெரியவரவில்லை. அவர் முன்னர் ஒருதடவை ரோந்து சென்ற படை வீரர்களை மிரட்டிய குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டவர் என்றும் அவர் ஒரு மனநோயாளியாக இருக்கலாம் என்றவாறான தகவல்களும் வெளியாகியுள்ளன.
நாட்டின் வட பகுதியில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை வளாகத்தில் வைத்து முன்னாள் மணவனாகிய இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் வெட்டிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் “தாக்குதல் முன்னெச்சரிக்கை” நிலை ஒக்ரோபர் 13 ஆம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது தெரிந்ததே. அதேசமயம் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் காரணமாக பிரான்ஸின் முஸ்லிம் மற்றும் யூத சிறுபான்மையினர் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
யில் நிலையங்கள், விமான நிலையங்கள், உல்லாச மையங்களில் வெடிகுண்டு மிரட்டல்களும் அடிக்கடி விடுக்கப்பட்டுவருகின்றன.